D
கேகாலை (Kegalle) மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க டோசன் (Dawson) பங்களாவை விற்கும் நடவடிக்கை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் (Kabir Hashim) யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22.05.2024) இடம்பெற்ற அமர்விலேயே இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த பங்களாவை விற்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அந்த பங்களாவின் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும், இன்றுவரை தங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் கொழும்பு – கண்டி வீதியை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய பிரித்தானியரான டோசனின் வசிப்பிடமாக இருந்ததால், இந்த பங்களா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கின்றது.
இந்நிலையில், இந்த பங்களாவை விற்பனை செய்வதற்கு பதிலாக அருங்காட்சியகமாக மாற்றுவது சிறந்த திட்டமாக இருக்கும்.
அதேவேளை, டோசன் பங்களா தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாகவே உள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.