Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நாட்டின் கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை: நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

0 3

2022ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 128% ஆக இருந்த இலங்கையின் கடன் சுமையை 2032ஆம் ஆண்டுக்குள் 95% ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2022 இல் 9.6% ஆக இருந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் சேவை 2027 இற்குள் அது 4.5% ஆக குறைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “பொருளாதார மாற்ற சட்டமூலத்தின் ஊடாக உற்பத்தித்திறனை அதிகரித்து ஒவ்வொரு பிரஜைக்கும் சம வாய்ப்புள்ள நாடாக இலங்கையை மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும்.

மேலும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நாட்டை உருவாக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, பொருளாதார வளர்ச்சிக்கு இணைந்த வகையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், புத்தாக்கத்துடன் கூடிய ஏற்றுமதி விரிவாக்கப்பட்ட போட்டிச் சந்தையை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த சட்டமூலம் பற்றி அறியாதவர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களால் மாத்திரமே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும்.

இந்தச் சட்ட மூலத்தில் உள்ள இலக்குகளை அடைய முடியாது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான இலக்கைக் கொண்டிருந்தாலும் ஏனைய எதிர்க்கட்சிகள் அரசியல் நோகத்தை மாத்திரமே வைத்துள்ளன.

மேலும், நமது நாட்டில் இலக்குமயப்பட்ட சட்டக் கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படாமையே, பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன், 2022ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 128% ஆக இருந்த நாட்டின் கடன் சுமையை 2032ஆம் ஆண்டுக்குள் 95% ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக நாம் செயற்பட வேண்டும்.

மேலும் 2022 இல் அரசாங்கத்தின் மொத்த பண விநியோகம் 34.6% ஆக இருந்தது. அது 2032 ஆம் ஆண்டாகும்போது 13% ஆக குறைக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் சேவை 2022 இல் 9.6% ஆக இருந்தது. 2027 இற்குள் அது 4.5% ஆக குறைக்கப்பட வேண்டும்.

இந்த இலக்குகளை இந்த நாட்டின் சட்டக் கட்டமைப்பாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் நாட்டில் நிலைபேறான பொருளாதாரம் உருவாகும்.

மேலும், 2022 ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதாரம் மறை 7.8 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த சட்ட மூலத்தின் மூலம் 2027 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி விகிதம் 5% சதவீதத்தை தாண்டிச் செல்லும். வேலையின்மை 2022 இல் 4.7% ஆக இருந்தது. இது 2025 ஆம் ஆண்டளவில் 5% க்கும் குறைவாக பேணப்படும்.

மேலும், 2022 ஆம் ஆண்டு, பெண்கள் தொழிற்படையில் இணையும் எண்ணிக்கை 32.1% ஆக இருந்தது. 2030 ஆம் ஆண்டாகும்போது 40%க்கும் குறையாக எண்ணிக்கையினால் அதிகரிப்பதும் 2040 இல் 50% வரை அதனை உயர்த்துவதும் எமது இலக்காகும்.

மேலும், நடைமுறைக் கணக்கு இருப்பு 2022 ஆம் ஆண்டில் மறை 1.9% ஆக இருந்தது. 2025 ஆம் ஆண்டாகும்போது அதனை 1% ஆக பேணலாம். 2022 இல் 21% ஆக இருந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, 2025 இல் 40% ஆகவும், 2040 ஆம் ஆண்டாகும்போது 60% வரை அதிகரிப்பது பொருளாதார பரிமாற்றம் சட்டமூலத்தின் மூலம் இடம்பெறும்.

2022 இல் 1.6% ஆக இருந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள், 2030 ஆம் ஆண்டாகும்போது, குறைந்தபட்சம் 5% அளவில் பேண எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி முதலீட்டின் அளவை நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியில் 2030 ஆம் ஆண்டாகும்போது 40% வரை மாற்றுவதே எமது இலக்காகும்.

அதேபோன்று, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பொருளாதார நிலைப்படுத்தல் வேலைத்திட்டத்தில் முக்கிய காரணி நமது நாட்டின் முதன்மை இருப்பு ஆகும். 2022 ஆம் ஆண்டளவில் மறை 3.7% ஆக காணப்பட்ட முதன்மை இருப்பை 2025 ஆம் ஆண்டளவில் நேர் 2.3% ஆக மாற்றி, 2032 ஆம் ஆண்டுக்கு அப்பால் அதனை 2% ஆக பேணவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

மேலும், 2022 ஆம் ஆண்டில் அரச வருமானம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 8.3% ஆக இருந்தது. 2025ஆம் ஆண்டுக்குள் அதை 15%க்கும் அதிகமாகப் பேணுவதே எமது இலக்கு. இதன் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்க முடியும்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள மறுசீரமைப்புச் செயல்முறையால், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வறுமை நிலையை 2027 ஆம் ஆண்டுக்குள் 15% க்கு கீழேயும், 2035 ஆம் ஆண்டாகும்போது 10% வரை கொண்டு வருவதே எமது குறிக்கோள்.

இந்தப் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தின்படி, உள்ள சட்டத்திற்கு உட்பட்ட இலக்குமயப்பட்ட வேலைத்திட்டத்திற்கு தேவையான மறுசீரமைப்புகள் மற்றும் வேலைத்திட்டங்களை செயல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ளதுடன், நாம் அவற்றை தயக்கமின்றி நிறைவேற்றுவோம் என்பதையும் கூற வேண்டும்” என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.