D
ஆறு மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவின் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதனை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி அசேல குணவர்தன, நாடாளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அளவை விட அதிகமான அஃப்லொடொக்ஸின் காணப்பட்டமையால் 06 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவின் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக சுகாதாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டில் போசாக்கு தேவைகள் இனங்காணப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் காணப்படவேண்டிய அஃப்லொடொக்ஸின் அளவை 5 வரை அதிகரிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், திரிபோஷாவுக்குப் பதிலாக அரிசியில் புதிய போஷாக்கு உணவைத் தயாரிப்பது குறித்து லங்கா திரிபோஷா நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.