D
இதுவரை நிரந்தர நியமனம் பெறாத 8400 ஊழியர்களுக்கு இன்று (04) முதல் 10 நாட்களுக்குள் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படுமென மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஜானக வக்கம்புர (Janaka Wakkumbura) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (03) அதிபர் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்தை குழப்புவதற்கு ஒரு குழுவினர் செயல்படுவதை நாம் அறிவோம் எனவே எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
உலக சுற்றாடல் தினத்தை தேசிய ரீதியில் கொண்டாடுவதை இரத்து செய்து அந்த நிதி ஒதுக்கீட்டை மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் செடிகள் நடப்படும் என்றும் தேசிய கொண்டாட்டத்துடன் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செடியை நடுமாறும் இராஜாங்க அமைச்சர் கோரியுள்ளார்.
அத்தோடு, வெள்ள நிலைமை சீரானவுடன் அந்த பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளதுடன் அவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள நிலையில் சேதமடைந்துள்ள பாலங்கள், வடிகாண்கள் மற்றும் வீதிகள் ஆகியவற்றைப் புனரமைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளும், உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் நலனுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளன.
மேலும், இந்த நடவடிக்கையில் பணத்தை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் தேவையான பணிகளை செய்யுமாறு ரணில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.