D
இலங்கையில் (Sri Lanka) இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காணுவது மிகவும் முக்கிய விடயம் என அதன் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர (Sudath Samaraweera) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 90,000 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதேபோல், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மே மாத இறுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது.
எதிர்வரும் காலங்களில் பருவமழையால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
93,874 இடங்களை ஆய்வு செய்துள்ளோம். இங்கிருந்து நுளம்புகள் பெருகக்கூடிய 28,310 பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
மேலும், நுளம்புக் குடம்பிகள் உள்ள 4,890 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.