D
கோழி இறைச்சி நுகர்வு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை, குறிப்பாக வெள்ள நிலைமைகளினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொதுப் பணியாளர் ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கோழி இறைச்சி கொள்வனவு செய்யும் போது மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைய வெள்ள நிலைமைகளினால் மாசடைதல்களுக்கு உள்ளாகும் பண்ணை விலங்குகள் மூலமான நோய்த் தொற்றுக்கள் குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல கோழிப் பண்ணைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் அவற்றின் பல கோழிகள் கொல்லப்பட்டதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வெள்ள நீரின் ஊடாக பல்வேறு நோய்க் கிருமிகள் பரவியிருக்கலாம் எனவும், எலிக் காய்ச்சல் வைரஸ் போன்றன பரவியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பக்றீரியா தொற்று காரணமாக பண்ணைகளில் கோழிகள் உயிரிழப்பதாகவும் வெள்ளம் காரணமாக இவ்வாறான பக்றீரியாக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு பரவியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தில் கொல்லப்பட்ட கோழிகள் சில கடைகளில் இறைச்சியாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அவ்வாறான சில கடைகளில் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக கோழி இறைச்சியின் தோல் பகுதி வெள்ளை நிறமாகவன்றி சிகப்பாக காணப்பட்டால் அவை வெள்ளத்தில் கொல்லப்பட்ட கோழிகளாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு வெள்ளத்தில் உயிரிழந்த விலங்குகள் மீட்போல்ஸ் மற்றும் சொசேஜஸ் செய்வதற்கு அனுப்பி வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.