D
உள்நாட்டில் நிறுவப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) எதிர்கொள்ளும் சவால்களை நிவர்தி செய்ய நாடு முழுவதும் 25 மாவட்ட தொழில் மேம்பாட்டு அமைப்புக்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த சபைகளின் கட்டமைப்பு, பங்கு மற்றும் பொறுப்புகளை தீர்மானிப்பதற்கும் முழு செயல்முறையையும் மேற்பார்வை செய்வதற்கும் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வழிநடத்தல் குழு ஒன்று நியமிக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இதனை தெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தற்போது பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றன என்பதை ஒப்புக்கொண்ட அவர், அணுகக்கூடிய மற்றும் நன்மை பயக்கும் ஒரு அமைப்பின் அவசியத்தை உணர்ந்து, இந்தத் தொழில்கள் தங்கள் சவால்களை சமாளிக்க உதவும் ஒரு ஆதரவான சூழலை உருவாக்க அரசாங்கம் முயல்கிறது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
இதை அடைவதற்கு, தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கிடையில் வலுவான உறவுகளை ஏற்படுத்துவதும் மேம்படுத்துவதும் அவசியம் என்றார்.
பலதுறை மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் உள்ளூர் மட்டத்தில் தரமான மற்றும் திறமையான நிறுவன ஆதரவு மற்றும் சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இலக்காகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவினால் முன்வைக்கப்பட்ட இதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.