D
மாத்தறையில் ஐந்தாம் வகுப்பில் பாடசாலை கல்வியை நிறுத்திய மாணவன் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட செயல் நெகிழ வைத்துள்ளது.
மிதிகம பொலிஸாரின் தலையீட்டினால் மாணவனின் பாடசாலைக் கனவு மீண்டும் நிஜமாகியுள்ளது. மூன்று பிள்ளைகளை கொண்ட பிரியந்த மற்றும் மனைவி ரசிகா லக்ஷானி ஆகியோரின் இரண்டாவது மகன் மலிந்துவுக்கு மீண்டும் பாடசாலை செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாத்தறை, மிதிகமவில் வசிக்கும் மலிந்துவின் குடும்பம், பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் நிரந்தர வீடு கூட இல்லாததால் மிகவும் அவல நிலைக்கு தள்ளப்பட்டது.
மலிந்துவின் பாடசாலை கல்வி ஐந்தாம் வகுப்போடு நின்று போனது, பொருளாதார நெருக்கடி காரணமாக மலிந்துவை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலும் மலிந்துவின் பெற்றோர் அவரை பாடசாலையில் சேர்க்க முயன்றனர். அந்த முயற்சி வெற்றியடைந்தாலும், வகுப்பில் சேர்ப்பதற்கு ஏனைய செலவுகளுக்கு பணம் இல்லாததால் அந்த வாய்ப்பு மீண்டும் தவறிவிட்டது.
வேறு சில காரணங்களுக்காக மலிந்து தனது பெற்றோருடன் மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது, மலிந்து பாடசாலைக்கு செல்லாதது தொடர்பில் பொலிஸார் அவர்களிடம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் பாடசாலை செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி அசோக அபிவர்தன முன்னெடுத்து சிறுவனை பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமான செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.