D
சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்கும் முயற்சிகளை தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த விடயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
புதிய சட்ட ஏற்பாடுகளின் மூலம் இவ்வாறான நாச வேலைகளை தடுத்து நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை குழப்புவதை தடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்யக்கூடிய வகையில் சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய ஏற்பாடுகளின் ஊடாக மக்கள் அச்சமின்றி தங்களது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்கவும் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு ஒன்று வழங்குவதற்கு கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் பெற்றுக் கொண்டு உள்ளதாகவும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சில சக்திகள் நாட்டை குழப்ப முயற்சிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.