D
பங்களாதேஸ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் (Dhaka) ஏற்பட்டுள்ள கலவரத்தால் இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அப்பகுதியில் ஊரடங்கு சட்டம் (Curfew) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஸில் அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
இதனையடுத்து, நேற்றையதினம் (19.07.2024) போராட்டக்காரர்கள் நரசிங்கிடி சிறைச்சாலை மீது தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்தார்.
இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பங்களாதேஸ் இராணுவம் வீதிக்கு இறங்கும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, பங்களாதேஸின் அனைத்து தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளும் ஏறக்குறைய முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளன.