Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

8 பில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுள்ள இலங்கை : ரணில்

0 1

கடந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு, நடுத்தர வர்த்தகர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களை முன்னேற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் தொழில்சார் முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொருளாதார வளர்ச்சியினால் தான் இரண்டு வருடங்கள் முடிவதற்குள் எமது நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க முடிந்தது. வேறு எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வந்ததில்லை. ஆனால் நாம் வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டிருப்பதோடு, 08 பில்லியன் டொலர் கடன் நிவாரணத்தையும் பெற்றிருக்கிறோம்.

இன்று நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது. நாம் இங்கிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாமல் முன்னெடுத்துச் செல்ல வேறு வழிகள் உள்ளதா? என்பது குறித்து நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேவை. முதலீடுகள் ஊக்குவிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும்.

ஆனால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் வேளையில் கடந்த கால நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த பொருளாதார வளர்ச்சியின் பலன்களை இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கு வழங்குவதே எனது பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. அந்த மக்களுக்காக, ஆறுதல் திட்டத்தை செயல்படுத்தினோம்.

அங்கு, நலத்திட்ட உதவிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை, மூன்று மடங்காக உயர்த்தப்பட்டு, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

கடந்த புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. அத்துடன் இலவச காணி உரிமையை வழங்க உறுமய வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையை வழங்க ஆரம்பித்துள்ளோம். மேலும், பெருந்தோட்ட பிரதேசங்களை கிராமங்களாக மாற்றும் திட்டங்களும் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் இந்நாட்டின் சாதாரண மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு ஆர்ம்பிக்கப்பட்டவையாகும்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவிலான முதலீட்டாளர்களை நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அழைக்கிறோம். கடந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு, நடுத்தர வர்த்தகர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களை முன்னேற்றும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.