Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

வடக்கு யூடோ போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரன்

0 2

வடக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற யூடோ (Judo) போட்டியில் முதலிடம் பெற்று முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் அசோக்குமார் திருக்குமரன்.

சாதிக்கத் துடிக்கும் ஈழத்து இளைஞர்கள் வரிசையில் திருக்குமரனும் சேர்ந்துள்ளார் என்பதோடு விடா முயற்சியும் சுயமாக போராடி வெல்லும் ஆற்றலும் அவரிடத்தில் அதிகமாக இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வளங்கள் குறைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பயிற்சிகளைப் பெற்று மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டி மாகாண மட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு இவர் முதலிடம் பெற்றுள்ளார்.

மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி,வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்தும் யூடோ போட்டியில் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி (19.05.2024) முல்லைத்தீவு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாண மட்ட யூடோ போட்டிகளில் கலந்து கொண்டே இந்த வெற்றியை பெற்றுள்ளதாக திருக்குமரன் உடனான உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார்.
5 போட்டியாளர்களிடையே நடைபெற்றிருந்த 4 போட்டித் தெரிவுகளில் இவர் கலந்து கொண்டுள்ளார்.

இதில் வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள செயலாளர் சதானந்தன், முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி சுதர்சன் ஆகியோருடன் தேசிய மட்ட யூடோ நடுவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

யூடோ போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்ட முடிந்த போதும் யூடோ பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தங்கள் கிராமத்தில் உள்ள வளங்கள் போதாதுள்ளமை பெரும் குறையாக இருப்பதாக திருக்குமரன் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சிகளை பெற்றுக்கொள்ள போதியளவு வளங்கள் இருந்தால் ஏனையவர்களுக்கும் பயிற்சியளிக்க முடியும். அவர்களையும் போட்டிகளில் கலந்துகொள்ள வைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மரதன் ஓட்டம் மற்றும் குத்துச்சண்டைகளிலும் ஆர்வமுள்ளவராக இருக்கும் திருக்குமரன் தென்னாசிய நாடுகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.

மேலும், உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தில் சில காலம் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகவும் தனார்வமாக கடமையாற்றியுள்ளார் என பாடசாலையில் திருக்குமரனிடம் இருந்து பயிற்சி பெற்ற மாணவனொருவர் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.