D
ஜனாதிபதியின் தந்திரத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், 22 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் எனவும், பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் மக்களை குழப்பத்துக்குள் தள்ளும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உருவாக்கப்படும் போது அதன் 83(ஆ) உறுப்புரையை திருத்தம் செய்ய மறந்து விட்டோம்.
ஆகவே மன்னித்து விடுங்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டு 22 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி கொண்டு வந்துள்ளார்.
22 ஆவது திருத்தம் பற்றி ஜனாதிபதி குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 30(2) உறுப்புரை திருத்தப்பட்டு, 06 வருட பதவி காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.
83(ஆ) உறுப்புரையில் ஆறு வருடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை திருத்தம் செய்தாலும், செய்யாவிடினும் எவ்வித பயனும் கிடைக்காது.
அதனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது இதனை உயர்நீதிமன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் 83(ஆ) உறுப்புரையை திருத்தம் செய்ய முடியாமல் போனது என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது.
அந்த உறுப்புரையை திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் அவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தவில்லை” என்றார்.