D
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் இடம்பெறும் முறைகேடுகளுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள், உடனடியாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட கவனம் செலுத்திய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை விரிவுபடுத்துமாறு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதன்படி ஒரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ வெளிநாட்டு வேலையைப் பெற பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு சரியான உரிமம் உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் அனுமதியை பெற்றுள்ளதா என்பதை கண்டறியுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,வேலை தேடுபவர்கள் 1989 என்ற அவசர எண்ணிற்கு அழைப்பதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, 22.07.2024 முதல் (26) வரையான 5 நாட்களில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் 12 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.