D
காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர வீதியின் ஹருமல்கொட பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் நடந்து சென்ற இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் காயமடைந்தார். மற்றைய நபர் தப்பியோடியதாகவும், பின்னர் காயமடைந்த நபர் அருகில் இருந்த முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்ட போது, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் முச்சக்கரவண்டியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முச்சக்கரவண்டியின் சாரதியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 34 மற்றும் 54 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.