D
முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரித்தானிய (UK) தொழிலாளர் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
“முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று, இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களையும், பரந்த மனித உரிமை மீறல்களையும் நினைவுகூருகிறோம்.
இன்று, என் எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்டவர்கள், தப்பி பிழைத்தவர்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள், மற்றும் அவர்கள் அனுபவித்த கொடுமைகளால் ஏற்பட்ட வலியுடன் தொடர்ந்து வாழ்பவர்கள் நோக்கியே உள்ளது.
இறுதி போரில் காணாமல் போனவர்களை நினைவு கூர்வதுடன், அட்டூழியங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதை நினைவூட்டுவதாகவும் இந்நாள் இருக்க வேண்டும்.
நம் நாடு முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள் இந்த புனிதமான நாளை நிதானித்து சிந்திக்கும்போது, நிரந்தர அமைதி, நல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களுக்கான நீண்டகால அரசியல் தீர்வை நோக்கி உழைப்பதற்கான நமது உறுதிப்பாட்டை தொழிலாளர் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF)18 மே 2024 அன்று லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்விற்கு பிரதான எதிர் கட்சியாகிய தொழில் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) பிரித்தானிய தமிழர் பேரவைக்கு இனவழிப்பு நினைவு தின செய்தி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.