Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இலங்கை இந்திய கிரிக்கெட் தொடரில் இழைக்கப்பட்ட பாரிய தவறு

0 2

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் பாரிய தவறு இழைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய அணிகள் மோதிக் கொண்ட முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி சமனிலையில் நிறைவைடைந்தது.

இவ்வாறு சமனிலையில் நிறைவடையும் போட்டிகளின் போது வெற்றியை நிர்ணயம் செய்வதற்காக சுப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட வேண்டும்.

எனினும், இந்தப் போட்டியின் போது குறித்த நியதி பின்பற்றப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உலகில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளுக்கு போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய ரஞ்சன் மடுகல்ல இந்தப் போட்டியின் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றியிருந்தார்.

போட்டியின் நடுவர்களாக ரவீந்திர விமலசிறி மற்றும் ஜோயல் வில்சன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.

இந்தப் போட்டியின் தொலைக்காட்சி நடுவராக போல் ரபைலும், நான்காம் நடுவராக ருச்சிர பல்லியகுருவும் கடமையாற்றியிருந்தனர்.

இலங்கை இந்திய கிரிக்கட் நிர்வாக சபைகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தால் இந்தப் போட்டித் தொடருக்கு மட்டுமான விசேட நியதிகளை அமுல்படுத்த முடியும்.

எனினும், சர்வதேச கிரிக்கட் பேரவையின் நியதிகளின் அடிப்படையில் சர்வதேச ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சம ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டால், அந்தப் போட்டியின் வெற்றி தோல்வி சுப்பர் ஓவர் மூலம் நிர்ணயிக்கப்படும்.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த நியதி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அமுல்படுத்தப்பட்டது.

இவ்வாறான ஓர் பின்னணியில் போட்டி நடுவர்கள், போட்டி மத்தியஸ்தர், தொலைக்காட்சி நடுவர் மற்றும் நான்காம் நடுவர் ஆகிய அனைவரும் இந்த சுப்பர் ஓவர் விவகாரத்தை மறந்து விட்டார்களா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நடத்தக் கூடிய சூழ்நிலை காணப்பட்டால் வெற்றி தோல்வியை சுப்பர் ஓவர் மூலம் நிர்ணயிக்க வேண்டுமென நியதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் போட்டி நியதி 16.3.1.1 இன் பிரகாரம் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியொன்றில் இரு அணிகளும் சம ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டால், அசாதாரண சூழ்நிலைகள் தவிர்ந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுப்பர் ஓவர் மூலம் வெற்றியை நிர்ணயிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டியொன்று நிறைவடைந்து விட்டதனை குறிக்கும் வகையில் கள நடுவர்கள் தங்களது பக்க விக்கெட்டுகளின் பேல்ஸ்களை தட்டிவிடுவார்கள்.

இலங்கை இந்திய போட்டியின் போது இரு அணிகளும் சமனிலை ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் போட்டி முடிவுக்கு வந்ததாக நடுவர்கள் சைகை செய்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் போட்டி மத்தியஸ்தர், தொலைக்காட்சி மற்றும் நான்காம் நடுவர்களும் எதனையும் கூறவில்லை.

மேலும் இரண்டு அணிகளின் வீரர்களும் போட்டி நிறைவானதை குறிக்கும் வகையில் எதிரணி வீரர்களுடன் கைலாகு செய்திருந்தனர்.

இந்த சர்ச்சை தொடர்பில் இந்திய கிரிக்கட் சபையோ அல்லது ஶ்ரீலங்கா கிரிக்கட்டோ இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை.

Leave A Reply

Your email address will not be published.