D
பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் பிரித்தானிய பிரதமரின் செல்வாக்கு குறைந்துள்ளதாக அண்மைய ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதம் 5ஆம் திகதி பிரித்தானியாவின் பிரதமராக தொழில் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவியேற்றார்.
அவர் பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத போதும், அதற்குள் பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக பொதுமக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
இந்த மாதம், மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஆய்வமைப்பான Ipsos மேற்கொண்ட ஆய்வொன்றில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துணைப்பிரதமரான ஏஞ்சலா ரேய்னர் மற்றும் சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரின் செல்வாக்கு மக்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆய்வில் பங்கேற்ற பிரித்தானியர்களில் 52 சதவிகிதம் பேர் பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
மேலும், 22 சதவிகிதத்தினர் மட்டுமே பிரித்தானியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். 19 சதவிகிதத்தினர் நடுநிலையாக பதிலளித்துள்ளார்கள்.