D
பங்களாதேஷ்(bangladesh) அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன்(shakib al hasan) மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தானுக்கு(pakistan) எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷகிப் அல் ஹசன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவராவார். அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற கலவரங்களை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு தப்பியோடி இருந்தார்.
இந்த நிலையில் அந்த கலவரங்களில் சிக்கி நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலியானார்கள். அந்த கலவரத்தின் போது ரபிக்குல் இஸ்லாம் என்பவரின் மகன் ரூபெல் ஓகஸ்ட் 5ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். அது குறித்த வழக்கு ஒன்று அடாபூர் காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபர் இறப்பதற்கு முன் பல்வேறு பெயர்களை கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் சுமார் 156 நபர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும், முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் நஜ்முல் ஹசன் என பல முக்கிய நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
தற்போது 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருக்கிறார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடி இருக்கும் நிலையில், ஷகிப் அல் ஹசனும் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வேறு நாட்டுக்கு சென்று தலைமறைவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற நாடுகள் அவருக்கு அடைக்கலம் கொடுக்காமல் இருக்கவே அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.