D
சுமூகமான அரிசி உற்பத்தியால் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (Kilinochchi), இன்று (25.05.2024) இடம்பெற்ற மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், எமது நாடானது, அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. இதில், வன்னி, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டத்தினர் பெரும் பங்காற்றியுள்ளனர்.
எனவே, இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு காணி உரிமையை வழங்க முடிந்தமை அரசாங்கம் பெற்ற தனித்துவமான வெற்றியாகும்.
அதேவேளை, விரைவில் நவீன விவசாயம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால் அதனைப் பயன்படுத்தி, போட்டித் தன்மை மிக்க விவசாயத்துறையை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
அது மாத்திரமன்றி, உங்களின் காணிகளை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். போரினால் காணிகளை இழந்தவர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.
ஆகையால், தற்போது கிடைக்கும் காணிகளை இழந்துவிடக் கூடாது. நீங்கள் இந்தக் காணிகளில் விவசாயம் செய்து, வீடுகளைக் கட்டி அவற்றை உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்குங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.