D
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை மாற்றி சஜித் பிரேமதாச அல்லது அனுர திஸாநாயக்க ஆகியோரில் யாரையேனும் ஜனாதிபதியாக தெரிவு செய்தால் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தங்களைச் செய்ய முயற்சித்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
18 நாடுகள், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உள்ளிட்டனவற்றுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையின் பிரகாரமே எதிர்காலத்தில் செயற்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மட்டும் பேசி பயனில்லை, நாடுகளுடனும் பேச வேண்டியுள்ளது எனவும் நாடுகளுடன் பேசுவது சுலபமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கைகளை திருத்தி அமைத்தால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.