D
பொதுவான அடிப்படையில் ஐக்கிய மக்கள் சத்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் நல்லாதரவுடன் அமோக வெற்றி பெறுவார் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். டி. முத்தலிப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கண்டியிலுள்ள சிறுபான்மையின மக்கள் மிகுந்த நிதானத்துடன் தங்களுடைய வாக்குகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். டி. முத்தலிப் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெரும் அரசியல் சூழ்ச்சிகள் இந்த நாட்டில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நாட்டில் வாழும் சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது பல்வேறு இனவாத நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.
ஆரம்பத்தில் ஹலால் பிரச்சினையை கொண்டு வந்து பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி பொய்யான பரப்புரைகளை நாடெங்கும் மேற்கொண்டார்கள்.
தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினையை பெரியளவில் பூதகரமாகக் காட்டி தங்களுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். முஸ்லிம்களுடைய இறைநேசரையும் அல்குர்ஆனையும் கேவலப்படுத்துகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
பதுளையில் திட்டமிட்டு ஒரு ஜவுளிக் கடையில் பௌத்த சின்னம் இருப்பதாகக் காட்டி பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். நாட்டிலே மிகப் பயங்கரமான ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குலை நடத்தி சிங்களப் பெரும்பான்மையின மக்களுடைய சிந்தனையை திசை திருப்பினார்கள்.
அதனுடைய எதிரொலியாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவரங்களை ஏற்படுத்தி, பல இடங்களில் தாக்குதல்களை நடத்தினார்கள்.
திகன, கண்டி கவலரம், வைத்தியர் சாபிக்கு எதிரான போலிப் பிரச்சாரம் என இன்னும் எத்தனையோ சூழ்ச்சிகளையும் வன்முறைகளையும் ஏற்படுத்திய பின்னர் ஜனாதிபதி வேட்பாளரை பலப்படுத்திக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கினார்கள்.
எதிர்ப்பார்ப்புடன் அமோக வெற்றியைப் பெற்றார்கள். அவர்களுடைய பிழையான வருகையைத் தொடர்ந்து அவருடைய பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
நாடு படுபாதளத்திற்குச் சென்றது. பாரிய பொருளாதார நெருக்கடி தலைதூக்கி எரிவாயுக்காகவும் எரிபொருளுக்கவும் நீண்ட அணி வரிசையில் மக்கள் காத்துக் கிடந்தனர்.
உணவுப் பொருட்களின் விலையேற்றம், விவசாயிகள் உரமின்றி தவித்தனர். உணவுப் பஞ்சம், பால் மா தட்டுப்பாடு, போக்குவரத்துப் பிரச்சினை, வைத்தியசாலையில் மருந்துகள் இன்மையால் நெருக்கடியான நிலைமை போன்ற பல சவால்களை நாடு முழுமையாக எதிர்நோக்கியது.
அப்பொழுது ஒட்டு மொத்த நாட்டு மக்களுடைய எதிர்ப்பலைகள் ஜனாதிபதி கோட்பாய ராஜபக்சவுக்கு எதிராக பெரியளவில் நாடெங்கும் எழுந்தன.
பின்னர் காலிமுகத்திடலில் “கோத்தா கோ கம” என்ற இளைஞர்களின் போராட்டத்தின் காரணமாக பதவி துறந்தார். அதன் பின்னர் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க களமிறங்கியுள்ளார்.
இவர் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் என்றாலும் பொதுஜனப் பெரமுனவின் ஆதரவாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர் என்ற எண்ணப்பாடு வலுவாக வளர்ந்துள்ளது.
பொதுவான அடிப்படையில் ஐக்கிய மக்கள் சத்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் நல்லாதரவுடன் அமோக வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பீடுகள் சொல்லுகின்றன.
குறிப்பாக அனுர குமார திசாநாயக்க சிறுபான்மையின மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக் கொள்வது என்பது கடினமான விடயம்.
எனவே, சிறுபான்மையின மக்களாகிய நாங்கள் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒன்றுபட்டு அளிக்கின்ற வாக்குகளாலும், அதே போன்று இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் அளிக்கின்ற பெரு எண்ணிக்கையிலான வாக்குகளினாலும் 51 விகிதத்தை சஜித் பிரேமதாச பெற்று நிச்சயமாக வெற்றி பெறுவார்.
அதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது. சிறுபான்மையின மக்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மையின மக்களின் தேவையைக் கருத்திற் கொண்டும், கடந்த கால வருடங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கே வாக்களித்தல் வேண்டும்.
சஜித் பிரேமதாசவிற்கு அளிக்கப்படும் வாக்கானது அறிவியல் பூர்வமாக இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களை ஐக்கியப்படுத்தவும், அபிலாசைகளை வெளிப்படுத்தவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கான வாய்ப்பாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.