Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

முல்லைத்தீவின் கிராமங்களில் களையிழந்துள்ள ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகள்

0 1

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைகள் களையிழந்து உள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு வெளியானதுடன் தீவிரமடைந்த ஜனாதிபதி தேர்தல் திருவிழா முல்லைத்தீவில் உள்ள கிராமங்களில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மக்கள் அப்படியொன்று நடைபெறுவதாக அறிந்திராதவர்கள் போல் இயல்பாக ஆரவாரமற்று தங்கள் அன்றாட காரியங்களில் ஈடுபட்டு வருவதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் தங்கள் அவதானங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் நாளில் நாடு முழுவதும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் 39 வேட்பாளர்களில் பலரை அறிந்திராத மக்களாக கிராமப்புறங்களில் வாழும் மக்கள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

பாடசாலை மாணவர்களிடையேயும் சாதாரண பொது மக்களிடையேயும் தேர்தல்கள் தொடர்பான போதியளவு விழிப்புணர்வு இதுவரையில் உருவாக்கப்பட்டிருக்காததே இந்த நிலைமைக்கு காரணம் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இளைஞர் மற்றும் யுவதிகளிடையே ஓரளவுக்கு இம்முறை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆர்வம் உள்ள போதும் போதுமான தெளிவுடன் சரியான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் திடமான மனநிலை இல்வாதவர்களாக அவர்கள் உள்ளனர். அவர்கள் தளம்பல் மனநிலை இருப்பதையும் அவர்களுடனான உரையாடலின் போது அறிய முடிந்தது.

இத்தகைய நிலை தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் வீதத்தினை பாரியளவில் குறைக்கும் என்பதில் ஐயமில்லை. கட்சிகளின் பரப்புரைச் செயற்பாடுகள் மற்றும் சனாதிபதி வேட்பாளர்களின் தரிசனங்கள் கிராமங்கள் நோக்கி திரும்பும் போதுதான் உண்மையான சனநாயகம் நாட்டில் நிலவும் என்பதும் நோக்கத்தக்கது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அந்த பொது வேட்பாளருக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சியில் கிராமங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இருக்கவில்லை.

பல கிராமங்களில் பொதுவேட்பாளர் தத்துவம் தொடர்பில் எத்தகைய தெளிவும் இல்லாத மக்களாக அவர்கள் இருப்பதை அவதானிக்கலாம். இந்த நிலை தமிழ் பொது வேட்பாளர் முயற்சிக்கு கிடைக்கும் வெற்றி வாய்ப்புக்களை வெகுவாக குறைந்துவிடும்.

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் கருத்தில் எடுத்து செயற்படும் தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பானது கிராம மக்களின் தேர்தல் தொடர்பான அறிவை விரிவாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

தேர்தலில் வாக்களிப்பதற்கு வேட்பாளரை தெரிவு செய்து கொள்வதை இலகுவாக்கும் முயற்சியாக கிராமங்களில் உள்ள மக்களிடையே அதிதீவிர பரப்புரைகளை முடுக்கி விடவேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் முல்லைத்தீவில் உள்ள கிராமங்களில் தேர்தல் பரப்புரைகள் களைகட்டுமா? அல்லது கடந்த காலங்களில் நடந்து தேர்தல்கள் போல் செய்தி வழியாக மக்கள் அறியும் நிலைதான் இருக்குமா?

Leave A Reply

Your email address will not be published.