Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

மன்னார் மாவட்ட புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சுகாதார துறையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுப்பு

0 1

மன்னார் மாவட்டத்தின் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் பி.கே.விக்கிரமசிங்க (P.K.WICKRAMASINGHE) நியமிக்கப்பட்டு கடந்த 3 மாத காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தின் சுகாதார துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் சுகாதார துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து விசேட அறிக்கை ஒன்றை தயாரித்து அரச அதிபர்,சுகாதார அமைச்சு,உரிய அமைச்சர்கள் மற்றும் மன்னார் ஆயர் ஆகியோருக்கு சமர்ப்பித்து உடனடியாக குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அவர் முன் வைத்த பல்வேறு குறைபாடுகள் தொடர்பான கோரிக்கைகள் உரிய திணைக்களங்கள் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அமைச்சு மட்டத்தில் இருந்து விசேட குழுவினர் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த குறைபாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இதனடிப்படையில் உடனடியாக அபிவிருத்தி மற்றும் பொருட்கள் கொள்வனவுக்காக 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய கட்டிட அபிவிருத்தி பணிகளுக்கு 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்புதல் அமைச்சினால் வழங்கப்பட்டள்ளது.

மேலும், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் கீழ் பயன்படுத்த 2 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பயிற்சியை பூர்த்தி செய்து நியமனம் பெற்றுக் கொண்ட 39 வைத்தியர்கள் மன்னார் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நிரந்தரமான புதிய வைத்திய நிபுணர்களை நியமித்து அவர்கள் ஊடாக பயிற்சி வைத்தியர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

மன்னார் மாவட்டத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் பி.கே.விக்ரமசிங்க (P.K.WICKRAMASINGHE) நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.