D
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பதற்கு சர்வதேச வலை பின்னலை பின்னி ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரசார செயலாளர் யு.எல்.எம்.என் முபீன் (ULMN Mubeen) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இரண்டு தினங்களுக்கு முன்பு மட்டக்களப்பு (Batticaloa) சிவானந்தா மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அக்கூட்டத்தில் பேசிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரமுகர் பூபாபலப்பிள்ளை பிரசாந்தன் (Bhubabalapillai Prasanthan) பச்சை இனவாதத்தை கக்கும் வகையில் பேசி இருந்தார்.
இது தொடர்பில் முகநூலில் பலர், இந்த மட்டக்களப்பு தமிழ் அரசியல்வாதிகள் இப்போதுதான் இனவாதம் பேசுவதை போன்று நீலி கண்ணீர் வடித்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசியல் எப்போதும் இன ரீதியான பிரச்சாரங்களையும் முன்வைத்து பதவியை அடைய முயற்சிக்கின்ற ஒரு தேர்தல் களம் என்பது அரசியலில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விடயம்.
தமிழர்கள் மிக மோசமாக முஸ்லிம்களுக்கு எதிராக பேசி தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஏனைய அரசியல் பதவிகளை பெற்றுக் கொள்ளுகின்ற ஒரு நிலைமை மட்டக்களப்பிலே காணப்படுகிறது.
இப்போது ஜனாதிபதி தேர்தலில் செயற்படுகின்ற அல்லது பிரச்சாரம் செய்கின்ற கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு மாத்திரம் அவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து வர இருக்கின்ற நாடாளுமன்றத்தில் தமது ஆசனங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் தங்கள் பிரச்சாரங்களை முடுக்கி உள்ளனர்.
அந்த வகையில் தான் பிரசாந்தனின் பேச்சை தாங்கள் பார்க்க வேண்டும்.
கிழக்கு மாகாணம் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அரசியல் தெரியாதவர் அல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்க அத்திவாரமிட்டவரும் அல்லாமல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பதற்கு சர்வதேச வலை பின்னலை பின்னி தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்ரமசிங்க.
ரணில் விக்ரமசிங்கையின் இந்த செயற்பாடே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) யுத்தத்தை வெல்ல உதவியது.
யுத்தத்தை வெல்லுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவர் ரணில் விக்ரமசிங்க எனவே கிழக்கு மாகாணத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்கின்ற மிகுந்த அறிவை கொண்டவர் ரணில் விக்ரமசிங்க.
பிரசாந்தனின் பேச்சுகளை வைத்து கிழக்கை அவர் தாரை பார்ப்பார் என்பது அரசியல் அறிவிலித்தனம்.
அதேவேளை கிழக்கு மாகாணத்துக்கான முஸ்லிம் முதலமைச்சரை நியமித்து சிறப்பான ஒரு முதலமைச்சர் ஆக நசீர் ஹாபிஸ் (Nasir Habis) செயற்படுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவரும் ரணில் விக்கிரமசிங்க.
ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலத்திலேயே கிழக்கு மாகாணத்துக்கு ஒரு துடிப்புள்ள முதலமைச்சராக நசிர் ஹாபிஸால் பணியாற்ற முடிந்தது.
ஆக பிரசாந்தன் இவ்வாறு பேசிவிட்டார் என்று அரசியலுக்காக யாரும் இங்கு நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம்.
இங்கு கிழக்கு மாகாண மகிந்த ராஜபக்சவின் காலத்திலே கிழக்கு மாகாண தேர்தலில் நமது மண்ணின் மைந்தன் ஹிஸ்புல்லாவும் பிள்ளையானவர்களும் ஹம்மர் போராட்டம் ஓடியது.
அதனை மிகப் பிரச்சாரமாக செய்த தமிழ் ஊடகத்தின் பரப்பை மக்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
அதுமாத்திரமல்ல ரணில் விக்கிரமசிங்க எப்போதும் சொன்னதை செய்து காட்டுபவர்.
முஸ்லிம் காங்கிரஸுக்கு மூன்று தேசியப் பட்டியல் தருவதாக அவர் வாக்களித்த போது அவருக்கான தேசியப் பட்டியல் மிகக் குறைவாக கிடைத்த நேரத்தில் அவரது கட்சிக்குள்ளே பலத்த எதிர்ப்புகள் இருந்த நேரத்தில் அந்த மூன்று தேசிய பட்டியலையும் முஸ்லிம் காங்கிரஸுக்கு தந்தவர் ரணில் விக்ரமசிங்க.
ஆனால் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தேசிய பட்டியல் தருவதாக வாக்குறுதி அளித்து முஸ்லிம் காங்கிரஸுக்கு அந்த தேசியப் பட்டியலை வழங்காமல் வாக்குறுதியை மீறியவர்.
எனவே, அரசியலுக்காக நீங்கள் வீணான பிரச்சாரம் செய்யந் தேவையில்லை தற்பொழுது ரணில் விக்ரமிசிங்கவின் பக்கம் நிறைந்த முஸ்லிம் தலைவர்கள் அவருக்கு ஆதரவாக களத்தில் நின்று பணியாற்றுகின்றார்கள்.
அதேபோன்று தமிழ் மக்களும் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்காக களத்தில் பணியாற்றுகின்றார்கள்.
எனவே எல்லோரையும் சமமான கண்ணோட்டத்தில் நோக்கக்கூடிய தகுதியும் தராதரமும் கொண்டவர் ரணில் விக்கிரமிசிங்க.
எனவே எதற்கும் லாய்க்கு இல்லாத பிரசாந்தரின் கதையை தூக்கிப் பிடித்து நீங்கள் அரசியல் செய்ய வரவேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.