D
கனடாவில் கொல்லப்பட்ட சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் முன்னெடுத்துவந்த வாக்கெடுப்பு பிரச்சாரத்தை தற்போது நடத்திவரும் சமூக ஆர்வலரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.
ஒன்ராறியோவின் பிராம்டனில் குடியிருந்து வருபவர் சமூக ஆர்வலராக இந்தர்ஜித் சிங் கோசல். இவரை வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் ஒன்ராறியோ மாகாண பொலிசார் நேரிடையாக சென்று எச்சரித்துள்ளனர்.
அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்துள்ள அதிகாரிகள் நேரிடையாக சென்று எச்சரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பொலிசார் அவரது குடியிருப்புக்கு சென்ற போது அவர் அங்கே இல்லை என்பதால், அலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித்துள்ளனர்.
மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் சம்பவம் நடந்தால் பொலிசாரை நாடவும் கோரியுள்ளனர். இந்த விவகாரம் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கோசல் தெரிவித்துள்ளார்.
35 வயதான இந்தர்ஜித் சிங் கோசல், இந்தியாவின் சீக்கியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தை இரண்டாக பிரித்து காலிஸ்தான் சுதந்திரம் தொடர்பாக கனடா முழுவதும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை கோசல் ஏற்றெடுத்துள்ளார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரிடையான தொடர்பிருப்பதாக 2023 ஜூன் 18ம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார்.
காலிஸ்தான் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் இந்திய அரசாங்கம், நிஜ்ஜரை தீவிரவாதி என அடையாளப்படுத்தியது. இந்த நிலையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட காரணம் இந்தியா என்றே தாம் நம்புவதாக கோசல் தெரிவித்துள்ளார்.
கனடாவில் சீக்கியர்களை ஒருங்கிணைப்பதில் இந்தியாவுக்கு என்ன சிக்கல் என கேள்வி எழுப்பியுள்ள கோசல், கனடா போன்ற ஒரு அழகான நாட்டில் தாம் பாதுகாப்பாக இருப்பேன் என்றே நம்புவதாக தெரிவித்துள்ளார்.