D
மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல. ஆனால் ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு தேவையான தலைமைத்துவத்தையும் வலுவையும் எங்களுக்கு வழங்கினார் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”நாட்டின் தலைவர் என்ற வகையில் ரணில் வழங்கிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்களின் காரணமாக மின்சாரத் துறையின் செலவை ஈடுசெய்யும் விலைச்சூத்திரத்தை செயற்படுத்தி செலவை ஈடுசெய்ய முடிந்தது.
இந்நாட்டில் எத்தனை மணிநேரம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறதோ அதைவிட அதிகமான மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை இன்று பலர் மறந்துவிட்டனர்.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்த நாட்டில் 16 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.
மின் உற்பத்தி நிலையம் இருந்தபோதிலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் பிற பொருட்களை வழங்க முடியவில்லை.
மின்சார சபை உட்பட அரச நிறுவனங்கள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன. நீண்ட காலமாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்தவும் நீண்ட காலம் பிடித்தது.
மேலும் மின்சார சபைக்கு பணம் செலுத்தும் திறன் இல்லாமல், இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு கிடைக்காது.
எனவே இன்று பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது.
இதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எமது மின்சார செலவினங்களை கணிசமான அளவு குறைக்க முடியும்.” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.