D
13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் நேற்று (29.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு கிழக்கு மக்களும் இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என தீர்மானித்துள்ளார்கள். தமிழ் மக்களின் பிரச்சனைகள் 70 வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ளன.
தமிழ் மக்களின் அதிகாரப் பரவலாக்கலை எந்த அரசாங்கமும் இதயசுத்தியுடன் நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் எமது கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி, போன்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதில் 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டிருந்தன. எங்களுடைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நூறுவீதம் உறுதியாக உள்ளார்.
அதிலுள்ள அனைத்து விடயங்களும் நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக அதில் சர்சைக்குரிய விடையமாக அமைந்துள்ள பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.