Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தமிழ் பிரதிநிதிகளுக்கு அஜித் டோவல் வழங்கியுள்ள அறிவுரை

0 0

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்  தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு  ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்,

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும், ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி சந்திப்பில் சிறீதரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த போதிலும், வெளிநாட்டுப் பயணமொன்றுக்குச் செல்ல வேண்டியிருந்ததன் காரணமாக சந்திப்பின் தொடக்கத்திலேயே சிறீதரன் வெளியேறியிருந்தார்.

அதற்கமைய இந்த சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் நிலவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கடந்த 75 வருடகால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின் கீழ் வாழ முடியாது என்பதைத் தாம் புரிந்துகொண்டிருப்பதாகவும், அதேபோன்று அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்நோக்கிச் செல்ல முடியாது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் எம்.பி., அஜித் டோவலிடம் எடுத்துரைத்துள்ளார்.

ஆகவே 13 ஆவது திருத்தத்தையும், 2015 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி முறைமையை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட புதிய அரசமைப்பு வரைபையும் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்த கஜேந்திரன் எம்.பி., வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறைமையை வென்றெடுப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை குறித்தும், தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தீர்மானம் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் வாக்குவீதம் குறித்தும் கேட்டறிந்த அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என்று ஆலோசனை வழங்கினார்.

அத்தோடு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தான் கூறப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், இருப்பினும் இத்தகைய தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் ஜனநாயகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.