D
பங்களாதேசில் (Bangladesh) கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது வெடித்த வன்முறையில் 1,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்று இடைக்கால சுகாதார அமைச்சின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது 1971 சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் வரலாற்றில் இரத்தக்களரி காலகட்டமாக அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பொதுத்துறை வேலை ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
பின்னர் அது பிரதமர் சேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) எதிரான கிளர்ச்சியாக தீவிரமடைந்தது. இதனையடுத்து அவர் ஆகஸ்ட் 5 அன்று பதவி விலகி இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
இந்தநிலையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையிலான ஒரு இடைக்கால அரசாங்கம் ஹசீனாவுக்கு பின்னர் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றது.
இந்தநிலையில் வன்முறைகளில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்பார்வை இழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைவர் நூர்ஜஹான் பேகம் ( Nurjahan Begum) தெரிவித்துள்ளார்.
வன்முறைகளால் பலர் பார்வையற்றவர்களாக மாறியுள்ளனர், பலர் இரு கண்களிலும் பார்வையை இழந்துள்ளனர், பலருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, அவர்களில் பலரது கால்களை துண்டிக்க வேண்டியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.