Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

முழு இலங்கை தமிழ் மக்களிடமும் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்

0 2

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்களையும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் (P. Ariyanethran) சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இன்றையதினம் (31) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அந்த அறிக்கையில், “தமிழ் மக்கள் தமது அபிலாஷைகள் மற்றும் உரிமைகளை வலியுறுத்தி தமது போராட்டங்களை தீவிரப்படுத்தும் காலம் வந்துவிட்டது.

நாம் வாளாதிருந்தால் எமது கண்முன்னேயே எமது தாயகம் பிறர் வசம் கைமாறிவிடும். ஆகவே தான் இந்த சந்தர்ப்பத்தில் இம்முறை ஜனாதிபதி தேர்தலை நாம் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதற்காக ஆயுதம் ஏந்தி போராடுமாறு நான் வலியுறுத்தவில்லை, அது பொருத்தமானதும் அல்ல.நாம் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஏற்கனவே நாமும் எமது வெளிநாட்டு உறவுகளும் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கைக்கு எதிராக வர இருக்கின்றது.

அதனால் தான் நாம் இனிமேலும் உங்களின் போலி வாக்குறுதிகளையும் ஏமாற்றுக்களையும் நம்பப்போவதில்லை என்ற செய்தியை நாம் சிங்கள அரசியல்வாதிகளுக்கு எடுத்து கூற வேண்டும்.

அதேவேளை, சிங்கள அரசியல்வாதிகள் எந்த ஒருநியாயமான தீர்வினையும் எமக்கு முன் வைக்கப்போவதில்லை என்பதையும் அவர்களை நம்புவதற்கு நாம் தயாராக இல்லை என்ற செய்தியினையும் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இனிமேலும் தாமதம் செய்யாமல் இலங்கை விடயத்தில் நீங்கள் தலையிடவேண்டும் என்று தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக நாம் ஓங்கி ஒலிக்கவிருக்கின்றோம்.

இது காலம் எமக்கு ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு சந்தர்ப்பமும் நிர்ப்பந்தமும் ஆகும். இது வெறுமனே ஒரு எதிர்ப்பு நடவடிக்கை மட்டும் அல்ல.மாறாக இது ஒரு ராஜதந்திர போராட்டமும் கூட. அத்துடன் இது ஒரு அரசியல் செயற்பாடும் ஆகும்.

தமிழ் மக்கள் தமது தாயகத்தில் ஒன்றுதிரண்டு சிங்கள அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வெளிப்படுத்தும் எமது அபிலாஷைகளுக்கான குரல், உரிமைகளுக்கான குரல் மற்றும் அடக்கு முறைகளுக்கெதிரான குரல் இதுவாகும்.

இத்தனைகாலமும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஒத்துழைத்து அவர்களுக்கு வாக்களித்து ஏமாற்றப்பட்ட நாம் அவர்களின் சூழ்ச்சிகள், ஏமாற்றுக்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக அவர்களுடன் ஒத்துழையாமல் அவர்களுக்கு வாக்களிக்காமல் முன்னெடுக்கும் ஒரு ஒத்துழையாமை போராட்டமாகவும் இதனைக் கொள்ளலாம்.

அன்புக்குரிய தமிழ் மக்களே! இலங்கையின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் எமது தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு அவரின் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழராக ஒன்றுபட்டு குரல் எழுப்புவதற்கு தயாராகுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.