D
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அகில இலங்கை (srilanka) முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மாதாந்த விலை சூத்திரத்தின்படி நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை குறைக்க உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Sri Lanka Petroleum Corporation) அறிவித்துள்ளது.
எனினும், ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 300 ரூபாவாக குறைக்கப்பட்டால் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் தொகையை 80 ரூபாவாக குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து தற்போது தொழில்நுட்ப குழுவொன்று செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எரிபொருள் விலை திருத்தத்துடன் இணைந்து பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்த தீர்மானம் நாளை (02) அறிவிக்கப்பட உள்ளது.
குறித்த தகவலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.