D
38 நாடுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த தகவலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) நேற்றையதினம் (02) தனது உத்தியொகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதன் மூலம், விசா பெறுமிடங்களில் உள்ள நெரிசலை குறைக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விசா வழங்கும் முறைமையில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் தாமதத்தை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் சுற்றுலா அமைச்சரும், சுற்றுலா விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான ஹரின் பெர்னாண்டோவும் (Harin Fernando) குறித்த திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தொடங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அத்தோடு, இந்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.