D
கென்யா (Kenya) – நைரோபி விமான நிலையத்தை அதானி குழுமம் கையகப்படுத்துவதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்தியாவுக்கு எதிரான கோபமாக மாறக்கூடிய நிலை மிகுந்த கவலையளிக்கிறது என்று இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நைரோபி விமான நிலையத்தை அதானி குழுமம் கையகப்படுத்துவதற்கு எதிராக கென்யாவில் பரவலான எதிர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கென்யா விமானப் பணியாளர்கள் சங்கம், பணிப்புறக்கணிப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தநிலையில் அதானியுடன், இந்திய பிரதமருக்கு உள்ள நட்பு, இந்த விடயத்தின் ஊடாக சர்வதேசத்துக்கு சென்றிருப்பதால், அங்கு நடந்து வரும் போராட்டங்கள் இந்தியாவுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான கோபமாக எளிதில் மாறக்கூடும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தமது எக்ஸ் (X) பதிவில் கூறியுள்ளார்.
மேலும், அதானி குழுமத்தின் திட்டங்கள், அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பங்களாதேசிலும் இதேபோன்ற சர்ச்சைகளை உருவாக்கி இந்திய நலன்களுக்கு பேரழிவு தருவதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.
”இதேபோன்ற சர்ச்சைகள், இந்திய தேசிய நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. இந்த சர்ச்சைகள் இந்தியாவிற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
எடுத்துக்காட்டாக, ஜார்க்கண்டில் உள்ள அதானியின் நிலக்கரி ஆலையில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கான பங்களாதேஸ் அரசாங்கத்தின் ஒப்பந்தம், கடந்த மாதம் பிரதமர் சேக் ஹசீனாவை பதவி விலக செய்ய வேண்டிய கட்டாயப் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அதானியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களும் சர்ச்சையில் சிக்கி, 2022இல் இலங்கை அரசுக்கு எதிராகப் பரவலான போராட்டங்களுக்கு வழியேற்படுத்தியது என்று ரமேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், போராட்டம் பலமுறை பேச்சுவார்த்தைக்கு தாமதமானது. இதேவேளை கென்யாவில் அதானியுடனான ஒப்பந்தம், திருட்டுத்தனமாக விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் முயற்சி என்று தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், அதானி நிறுவனம், விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கு ஈடாக 1.85 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. அத்துடன், இரண்டாவது ஓடுபாதையைச் சேர்த்து, பயணிகள் முனையத்தையும் அந்த நிறுவனம் மேம்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.