D
இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் என்ற கட்சி ரீதியிலான நிலைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் ஏற்றுக்கொண்டார் என அக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தனது தனிப்பட்ட தீர்மானம் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என கூறியதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி கூட்டம் தொடர்பில் தனியார் ஊடகமொன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாடு என்பது 5 கூட்டங்களில் மேற்கொண்ட தீர்மானம் ஆகும். அனைவரும் கூறுவதை போல ஒரு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவு அல்ல.
பெப்ரவரி மாதத்தில் இருந்து 5 கூட்டங்களில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட முடிவே இதுவாகும்.
இதில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் கூட முதலாவது பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டது. அதில் இருவரை தவிர அனைவரும் அதற்கு எதிராகவே பேசினார்கள்.
தொடர்ந்து இரண்டாவது கூட்டத்தில் அரியநேத்திரன் கலந்துக்கொண்டார். அதில் அவர் இந்த கூட்டத்தில் தமிழ் பொதுவேட்பாளருக்கான எதிர்ப்பை இந்த கூட்டத்தில் அறிவிக்க வேண்டாம் என்றார்.
தொடர்ந்து தமிழ் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற 3ஆவது கூட்டத்திலே அரியநேத்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்திருந்தோம்.
அதற்கு அடுத்த கூட்டத்தில் அரியநேத்திரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்ற, தமிழரசுக் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுகின்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்திலும் கட்சி தலைவர் உட்பட அனைவரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
இறுதியாகவே நாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை புறக்கணித்தும், சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டோம். இது ஒன்றும் இறுதியாக திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல” என்றார்.