Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை

0 2

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை மாவீரர் துயிலுமில்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன். சுதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (9.11.2024) மாலை கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இங்குதான் ஆயிரக்கணக்கான மாவீரர்களுடைய வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. அதில் எனது சகோதரரும் ஒருவர். எம்மை பொறுத்தவரை இது துயிலுமில்லம் ஒரு சிலரை பொறுத்தவரை இது சுடுகாடு.

பிணங்கள் குவிக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பதை நான் இதை விட வேறு எங்கும் கண்டதில்லை. எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களில் இலங்கை இராணுவம் (Sri Lanka Army) குடியிருக்கின்றது.

அவர்களைப் பொறுத்தவரை இவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம். ஆனால் எம்மை பொறுத்தவரை இவர்கள் எமது உறவுகள், அண்ணன் தங்கைகள்.

இவர்களை அஞ்சலிக்க கூட முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் எம்மை வைத்துள்ளது.

இந்த இடத்தில் நின்று கொண்டு இலங்கை ஜனாதிபதி, பெளத்த குருமார்கள், சிங்கள மக்களுக்கு இருகரம் கூப்பி ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதை துயிலும் இல்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து இதை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதை விடுவிக்கும் பட்சத்தில் அமைதி, சமாதானம் இதில் இருந்தே ஆரம்பிக்கப்படும். இறந்தவர்களை அஞ்சலி செலுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு கிடைக்கும் போது ஒரளவேனும் மனநிறைவாக இந்த நாட்டில் அவர்கள் வாழ முடியும்” என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.