D
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (National People’s Power) ஒட்டுமொத்தமாக 159 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் வடக்கு – கிழக்கில் மட்டக்களப்பு தவிர்த்த எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayaka) தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருப்பதும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாபெரும் தேர்தல் வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்ற பின்னர் இலங்கை கொண்டாட்டங்களின்றி மிகவும் அமைதியாக காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் அநுரவின் கட்சிக்கு கிடைத்த மாபெரும் அறுதிப்பெரும்பாண்மை வெற்றி அரசியல் ஆய்வாளர்களால் கணிக்க முடியாது போனதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“இந்தத் தேர்தல் குறித்து கருத்துக்களைத் தெரிவித்த எந்த அவதானியும் தேசிய மக்கள் சக்திக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்குமெனக் கருதவில்லை.
அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கலாம் அல்லது பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைப்பார் என்றுதான் கருதப்பட்டது. இது யாருமே எதிர்பார்க்காத வெற்றி என மூத்த பத்திரிகையாளரான வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வளவு நாடாளுமன்ற ஆசனங்களை (159) எதிர்பார்க்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.
பழைய அரசியல் முடிந்துவிட்டது. மக்கள் அந்த சகாப்தத்தை முடித்துவிட்டார்கள். பல்வேறு சலுகைகளுடன் குடும்பக் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் இப்போது முடிந்துவிட்டது என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் எதிர்க்கட்சிகள் தான் என யாழ் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் குற்றஞ்சாட்டியுள்ளார்
எதிர்க்கட்சிகள் சீர்குலைந்து போயுள்ளன, அவற்றால் தேசிய மக்கள் சக்திக்கு வலுவான போட்டியை கொடுக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் பின்னர் பழைய அரசியல்வாதிகளில் கடுமையான வெறுப்புணர்வு பொதுமக்கள் காணப்பட்டார்கள் என்றும் அது இந்த தேர்தலில் எதிரொலித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவர்கள் மக்கள் முன்செல்லவே பயந்தார்கள் என்றும் அவர்களில் பலர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டுப் போரின் முடிவுக்கு முன்பும் பின்பும் இலங்கை அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்து மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷஷிந்திர குமார ராஜபக்ஷ மட்டுமே தேர்தலில் போட்டியிட்டார். அவரும் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.