D
வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன் என அம்பாறை (Ampara) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கவிந்திரன் கோடீஸ்வரன் (Kaveendiran Kodeeswaran) தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதியாக தெரிவாகிய பின்னர் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று (15) இரவு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு கருத்து வெளியிட்ட அவர், ”அம்பாறை மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதியாக இலங்கைத் தமிழசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான என்னை தெரிவு செய்த மக்களுக்கு நன்றிகள்.
நாடாளுமன்ற தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு பெரும் பாடுபட்டுள்ளதை நான் அறிவேன்.
இந்தத் தேர்தல் பிரசாரத்துக்கு மக்கள் வழங்கிய பேராதரவுக்கு மிக்க நன்றிகள். எனவே வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக நான் தொடர்ந்தும் இருப்பேன்” என தெரிவித்தார்.