Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது குறித்து அநுர விடுத்துள்ள பணிப்புரை

0 2

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மதுவரித் திணைக்களத்தின் (Excise Department) சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என சுட்டிக்காட்டியதுடன் உரிய நேரத்தில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

மதுவரி வசூலிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் அதில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அறவிடப்படவேண்டிய வரியை வசூல் செய்தல், கருப்புப் பட்டியிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் வரி வசூலிக்க முடியாத நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்தல் போன்ற புதிய முறைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், வரி அறவீடு செய்வதில் தற்போதுள்ள சட்டதிட்டங்களில் காணப்படும் குறைபாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், வரி அறவீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் மதுவரி உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு முறையிலுள்ள குறைபாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையில் நல்லபிப்பிராயம் கிடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான வகையில் அந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதேவேளை, உற்பத்தி மற்றும் பொதியிடல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளினால் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு, செயற்கைக் கள்ளு பாவனையினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.