Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நாட்டில் உச்சம் தொடும் தேங்காய் விலை – மக்கள் கடும் விசனம்

0 0

நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் விலையை 220, 230 ரூபாவாக வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன் சில பகுதிகளில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதாகவும் நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை அதிகமான விலைக்கே விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர்.

தேங்காய்களை மொத்தமாக விற்பனை செய்ய ஹட்டன் நகருக்கு சென்ற மொத்த வியாபாரிகள் குழு ஒரு பெரிய தேங்காயை மொத்த விலையில் 160 ரூபாய்க்கு சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்தாலும் சில்லறை விற்பனையாளர்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக ஒரு தேங்காயை 180-220 ரூபாய் வரை வெவ்வேறு சில்லறை விலையில் விற்றமை தெரியவந்துள்ளது.

மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யும் தேங்காய்களில் சில கெட்டுப்போவதாகவும், நஷ்டத்தை ஈடுகட்ட தேங்காய் ஒன்றுக்கு 30-40 ரூபாய் லாபம் ஈட்டுவதாகவும் சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில்லறை வியாபாரிகளின் இந்த மோசடியான இலாபம் தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தேங்காய் விலை உயர்வால், 2025ம் ஆண்டு பாற்சோறு சமைப்பது கூட பிரச்சினையாகி விட்டதாகவும் கூறுகின்றனர்.

தேங்காய்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தலையிடாதது ஏன் என நுகர்வோர் கேள்வி எழுப்புகின்றனர்.

சதொச விற்பனை நிலையங்களுக்கு ஊடாக 130 ரூபாவிற்கு தேங்காய் வழங்கப்படவுள்ளதாக சதோச நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் ஒருவர் 3 தேங்காய்கள் மற்றும் 5 கிலோ அரிசி ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என லங்கா சதொச தலைவர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் கொழும்பை சுற்றியுள்ள சதொச கிளைகளிலும், நாளை (06) முதல் கொழும்பிற்கு வெளியே உள்ள சதொச கிளைகளிலும் தேங்காய் மற்றும் அரிசியை கொள்வனவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.