D
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க முடியாத பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத் தொகையாக 1700 ரூபாவினை வழங்க முடியாத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தங்களை அரசாங்கம் ரத்து செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நிறுவனங்களை விடவும் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யக்கூடிய வேறு தரப்பினர் பெருந்தோட்டத் துறையில் முதலீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட 2385/14 என்ற இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
சம்பளப் பிரச்சினை குறித்து பெருந்தோட்ட நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத காரணத்தினால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வழங்காதிருப்பதற்கு பெருந்தோட்டத்துறைசார் நிறுனங்களுக்கு நியாயமான காரணங்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுதோட்ட உரிமையாளர்கள் தற்பொழுது தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.