D
நாட்டிலுள்ள மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கீரி சம்பா விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபா எனவும் அரிசி ஆலை வைத்திருக்கும் வியாபாரிகள் கீரி சம்பாவை முந்நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பா அரிசியின் கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாக உள்ளதால், ஆலைகளை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் அதனை விட அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிக விலைக்கு அரிசி வாங்கி கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாததால், மொத்த விற்பனை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா, சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நாட்களில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் கடைகள் நுகர்வோர் அதிகாரசபையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்வது தொடர்பாக முறைப்பாடு வந்தவுடன், வணிக வளாகங்களிலும், வணிக வளாகத்தை ஒட்டிய வணிக உரிமையாளர்களின் வீடு ஆகிய இடங்களில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை செய்யப்படும் என நுகர்வோர் அதிகாரசபை அதிகாரி தெரிவித்தார்.