D
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் (Sumanthiran) ஆலோசனைக்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, (Ranil Wickramasinghe) 2015 மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைத்ததோடு அன்றில் இருந்து இன்று வரை இதுபோன்று பல தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (Govindan Karunagaran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) வாவிக்கரையிலுள்ள கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் நேற்று (01.06.2024) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாடு ஒரு ஜனநாயக நாடா என்பது ஒரு கேள்விக்குறி. ஏன் என்றால் பல தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டும் நடத்தப்படாமலும் இருக்கின்றது. இது தென்னிலங்கை அரசியல் தலைவர்களுக்கு கைவந்த கலையாகும்.
குறிப்பாக ரணில், தேர்தலை பிற்போடுவதில் வலு கெட்டிக்காரர். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடந்த 7 வருடங்களாக நடைபெறவில்லை. அதேபோன்று 9 மாகாணங்களினது தேர்தல்கள் நடாத்தப்படாமல் ஆளுநரின் கீழ் நிர்வாக செயற்பாடு இடம்பெற்றுவருகின்றது.
அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை அவர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், இந்த நேரத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், தேர்தலை 2 வருடத்துக்கு ஒத்திவைக்கும் ஆலோசனையை கூறியுள்ளார்.
அதேவேளை, அந்த கட்சியின் தவிசாளர், தெற்கில் நடந்த கூட்டத்தில், தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் என்கின்றார். ஆனால் ஜனாதிபதி தரப்பிலிருந்து இவற்றிற்கு எந்தவிதமான பதிலும் இல்லை” என தெரிவித்துள்ளார்.