Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

பொருளாதார வளர்ச்சியின உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டியுள்ள ரணில்

0 3

2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் பல முனைகளிலும் காலக்கெடுக்களை சந்திக்க வேண்டியேற்பட்டுள்ளது.

இவற்றுள் முக்கியமானது சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை தீர்மானத்திற்கு முன்னதாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இறுதி செய்வதற்கான விரைவான காலக்கெடுவாகும்.

இலங்கையுடன் சுமார் 3 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் அடுத்த தவணையை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும்.

இந்தநிலையில் இருதரப்பு நன்கொடையாளர்களுடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இறுதி செய்வதில் ரணிலின் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இலங்கை மீதான பாரிஸ் கிளப் அதிகாரபூர்வ கடன் குழு, இலங்கையுடனான திட்டத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி குறித்த ஒப்பந்தம் இந்த மாதம் எந்த நேரத்திலும் கைச்சாத்திடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட புதிய நிதிச் சட்டத்தை, இந்த ஜூன் மாத இறுதிக் காலக்கெடுவிற்கு முன்னதாக அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் எதிர்கொள்ளும் அடுத்த காலக்கெடு வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலாகும்.

இதன்போது, தேசத்தின் தற்போதைய நிலை ‘பொய்’ என பல இலங்கையர்கள் அஞ்சும் நிலையில், பொருளாதார மீட்சிக்காக அவர் எடுத்த நடவடிக்கைகள் உண்மையில் நாட்டை பாதாளத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளன என்பதை ஜனாதிபதி பொது மக்களை நம்ப வைக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்று சிங்கள ஊடகத்தரப்புக்கள் கூறுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ. விஜேவர்தன, இலங்கையின் உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு, வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலாத்துறை என்பன நிரந்தர தீர்வுகளை வழங்காது என கூறியுள்ளார்.

இலங்கையின் சர்வதேச வர்த்தக சம்மேளனம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த வலையரங்கில் உரையாற்றிய அவர், பொருளாதாரத்தில் இலங்கையின் பெயரளவிலான துறைகளில் முன்னேற்றங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் உண்மையான துறைகளில் செயல்திறன் மோசமாக உள்ளது என்றும் பொருளாதார வளர்ச்சியின் பலனைப் பெற உண்மையான துறைகளில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்றும் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.