D
இலங்கையின் வருகை தரு இணைய விசா முறையை மூன்றாம் தரப்புக்கு (Outsource) வழங்கியமை தொடர்பில் விளக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக, பொதுப் பாதுகாப்பு மற்றும் குடிவரவுத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு மீண்டும் நாடாளுமன்றக் குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏதிர்வரும் செவ்வாய்க்கிழமை 4ஆம் திகதியன்று அவர்களை அழைத்துள்ளதாக பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்
முன்னதாக, அவர்களுக்கு கடந்த மே 14ஆம் திகதியன்று வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், அவர்கள் அந்த அழைப்பை புறக்கணித்தனர்.
எனினும், இது தொடர்பில் ஹர்ச டி சில்வா, நாடாளுமன்ற சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த அதிகாரிகள் வெளியிடும் தகவல்களின் அடிப்படையில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கையின் குடிவரவுத்திணைக்களம் மேற்கொண்டு வந்த வருகைத்தரு விசா இணையச்சேவை, மூன்றாம் தரப்புக்கு வழங்கப்பட்ட நிலையில், பிரச்சினை உருவானது.
இதனையடுத்து, குறித்த சேவையை மீண்டும் குடிவரவுத்துறை பொறுப்பேற்று நடத்தி வருகிறது.
இதேவேளை, தாய்லாந்து, அண்மையில் இலவச வருகைத்தரு விசாவை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலவச விசா அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.