D
உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்யா (Russia) போரில் சீனா (China) ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றம் சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, சீனாவின் இந்த நடவடிக்கை உலகிற்கு தவறான சமிக்ஞை என்றும் இதுவும் சீனாவின் கொள்கைகள் தவறு என்பதை நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனுடன் அனைத்து நாடுகளின் சுதந்திரத்தை ஆதரிப்பதாக சீனா கூறுகிறது ஆனால், ஒரு நாட்டை அழிக்க ஆயுதம் கொடுப்பது அல்லது ஆதரவளிப்பது நல்ல விடயம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு சீனா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாகவும் அமெரிக்கா (America) குற்றம்சாட்டியுள்ளது இது தொடர்பாக சீனாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சீனா இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
யுத்தத்தில் தாம் எவருக்கும் ஆயுதங்களை வழங்கவில்லை எனவும் மற்றும் ஆயுத ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாட்டை வைத்திருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
சீனா தொடர்ந்து ரஷ்யாவிற்கு நிதி உதவி செய்து வருவதாகவும் மற்றும் பிப்ரவரி 2022 இல் தொடங்கிய போருக்குப் பிறகு சீனா தொடர்ந்து ரஷ்யாவுடனான தனது உறவை வலுப்படுத்தி வருவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜூன் 15 மற்றும்16 திகதிகளில் சுவிட்சர்லாந்தில் (Switzerland) நடைபெறும் உக்ரைனுக்கான சர்வதேச அமைதி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளையும் அவர் வலியுருத்தியுள்ளார்.
இந்த நிலையில், அதற்கு ரஷ்யா தடையாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளதுடன் சர்வதேச அமைதி மாநாட்டை சீர்குலைக்கும் வகையில் பல நாடுகளுக்கு வழங்கப்படும் விவசாயம், உணவு மற்றும் இரசாயன பொருட்களை தடை செய்யப்போவதாக ரஷ்யா மிரட்டி வருவதாகவும் அத்தோடு இந்த மாநாட்டிற்கு செல்ல வேண்டாமென்று பல நாடுகளை ரஷ்யா கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநாட்டில் சீனாவை சேர்க்காதது சீனா யாரை விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்ததோடு சீனா போன்ற பாரிய, சுதந்திரமான மற்றும் சக்தி வாய்ந்த நாடு புதினின் கைப்பொம்மையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.