D
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நேற்று(3) அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் அதிபர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கண்டி(kandy)) மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவிற்கும் மகிந்தானந்த அளுத்கமவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
கூட்டம் முடிந்து வௌியேறும் போது மகிந்தானந்த அளுத்கம(Mahindananda Aluthgamage) மற்றும் குணதிலக்க ராஜபக்சவுக்கும் இடையில் மாடிப்படியில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் குணதிலக்க ராஜபக்சவின் மாடிப்படியில் இருந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. குணதிலக்க ராஜபக்ச இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குணதிலக ராஜபக்சவுடன் வாக்குவாதம் செய்ததாகவும், எனினும், அவரை தள்ள முயற்சிக்கவில்லை என்றும் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்த ஜகத் சமரவிக்ரம, அவ்விடத்திற்கு குணதிலக்க ராஜபக்சவை அழைத்துச் செல்ல முற்பட்ட போது அவர் தவறி விழுந்ததாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.