Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

வெளிநாட்டில் பெறப்பட்ட விவாகரத்து ஆணை இலங்கையில் அங்கீகரிக்கப்படும்

0 2

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட திருமணத்துக்கு வெளிநாட்டில் பெறப்பட்ட விவாகரத்து ஆணை இலங்கையில் அங்கீகரிக்கப்படும் என கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருமணச் சட்டங்கள் தொடர்பான சர்வதேச சட்ட தரங்களை முன்வைத்து, அமெரிக்க கலிபோர்னியாவில் (California) வசிக்கும் மனுதாரர் ஒருவருக்கு ஆதரவாகவே குறித்த விவாகரத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருகையில், இலங்கையில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்ட இரண்டு இலங்கை நாட்டவர்கள் (ஆண் – பெண்) அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர், அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை முறித்துக் கொள்ளவும், விவாகரத்து நடவடிக்கைகளைத் தொடங்கவும் முடிவு செய்துள்ளனர்.

எனினும், பிஜி ( Fiji) நாட்டில் மறுமணம் செய்து கொள்வதில் மனுதாரருக்கு ஆணுக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், மனுதாரர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் அமெரிக்காவில் ஏற்கனவே விவாகரத்து பெற்றுவிட்டதாகவும், பிஜியில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், பிஜியின் அரசாங்கம், மனுதாரரிடம், அவர் பிறந்த நாடான இலங்கையில் இருந்து ஒற்றை அந்தஸ்துக்கான (திருமணமாகாதர் அல்லது விவாகரத்துப் பெற்றவர்) ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும் என்று கேட்டிருந்தது.

எனவே, அமெரிக்காவில் வெளியிடப்பட்ட விவாகரத்து ஆணையை அங்கீகரித்து, நடைமுறைப்படுத்துமாறு, இலங்கை சட்ட அமைப்பின் மூலம் உத்தரவை மனுதாரர் கோருவதாக சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், பிஜியில் மறுமணம் செய்துகொள்வதற்கான ஒற்றை அந்தஸ்தை நிரூபிக்கும் சான்றிதழைப் பெறவும், இலங்கையில் ஏற்கனவே உள்ள திருமணச் சான்றிதழை இரத்துச்செய்யுமாறும் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை மையப்படுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை மனுதாரருக்கு சார்பாக வழங்கியுள்ளது.

முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றம், இலங்கையில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் வேறொரு நாட்டின் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விவாகரத்து ஆவணத்தை ஏற்றுக்கொள்வதற்கு தடையில்லை என்று கூறியிருந்தது.

எவ்வாறாயினும், குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் சான்றுகள் தொடர்பான சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இந்த ஏற்பு இருக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அத்தகைய ஒரு நாட்டின் சட்டம், வெளிநாடு ஒன்றில் நிச்சயிக்கப்படும் திருமணங்களை கலைக்க அந்தந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது முதல் வழிகாட்டுதல் ஆகும்.

இரண்டாவதாக, இலங்கையில் திருமண ஒப்பந்தம் செய்து கொண்ட இரு தரப்பினரும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் போது நியாயமான காலத்திற்கு அந்தந்த நாட்டில் வசிப்பது அவசியம்.

மூன்றாவதாக, கணவன் – மனைவி இருவரும் அத்தகைய விவாகரத்து நடவடிக்கைகளில் வெளிநாட்டு நீதிமன்றத்தில் தீவிரமாக பங்கேற்றிருக்க வேண்டும் என்பதே மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.