Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் தீர்மானம்

0 2

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.ஜே. நிலுக்ஷன், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிரன்சா களுதந்திரி, ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ். ஆலோக பண்டார, நிறுவன பணிப்பாளர் நாயகம் எச்.ஏ. சந்தன குமாரசிங்க, வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா, துமிந்த ஹுலங்கமுவ, சந்தி எச். தர்மரத்ன மற்றும் இசுரு திலகவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜீ.எல். வெர்னன் பெரேரா குழுவின் செயலாளராக செயற்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைப் பிரிவுகளுக்கிடையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து உரிய கவனம் செலுத்தி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அரச சேவையின் அனைத்துத் துறைகளிலும் உள்ள சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து, திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை நிபுணர் குழு சமர்ப்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 03 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.