D
சட்ட விரோதமாகத் துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாகத் தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகன் ஹண்டர் பைடன் ( Hunter Biden) குற்றவாளி என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் பைடன் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையிலேயே அவரின் மகன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரைத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய கட்டுப்பாடுகள் இல்லை.
18 வயதைக் கடந்தவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாகவே துப்பாக்கிகளை கொள்வனவு செய்யலாம். இதன்போது ஒரு விண்ணப்பத்தை மட்டும் அவர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
குறித்த விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட சில கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டு இருக்கும்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் மகனான ஹண்டர் பைடன் கடந்த 2018இல் துப்பாக்கியை கொள்சனவு செய்துள்ளார்.
எனினும் அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பமே அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
இதன்போது அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு ஹண்டர் பைடன் போதைப்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், ஹண்டர் பைடன் தற்போது போதைப்பொருளைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக அமெரிக்க அரசிடம் பொய் கூறியது, போதைப் பொருள் பயன்படுத்தும் போது துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இந்த மூன்று குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அமெரிக்க சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு 120 நாட்களில் தண்டனை விபரம் அறிவிக்கப்பட வேண்டும்.
இதன்படி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கும் நிலையில், அதற்குள் தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதியின் மகன் ஒருவன் குற்ற வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பைடன் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
அதேநேரம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.